அடிதடி வழக்கில் போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்த போது, குற்றவாளி ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த பிளேடை விழுங்கிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல், நரேஷ் என்கின்ற விக்னேஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய மூன்று பேரும் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் அருகே மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், குடிபோதையில் ரகலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று பேரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் விக்னேஷ் என்கின்ற நரேஷ் மீது வில்லிவாக்கம், புளியந்தோப்பு, கொரட்டூர், அம்பத்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. மேலும் இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் கண்டறியப்பட்டது.
அடிதடியில் ஈடுபட்டதால் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பும் பணியினை வில்லிவாக்கம் காவல் துறையினர் மேற்கொண்டனர். அப்போது விக்னேஷ் திடீரென தனது சட்டை பையில் மறைத்து வைத்திருந்த பிளேட்டினை வாயில் போட்டு விழுங்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், விக்னேஷை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதன் பின்னர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவனை கொண்டு சென்று அனுமதித்தனர்.