சீட்லாம் நெறைய இருக்கு; வேட்பாளர்தான் இல்ல..! – காத்துவாங்கும் கட்சிகள்!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (13:02 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தொடங்கியுள்ள நிலையில் வேட்பாளர்கள் இல்லாமல் சில கட்சிகள் காத்து வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என பரபரப்பாக இயங்கி வருகின்றன.

அதிமுக, திமுக போன்ற மாநில கட்சிகளுக்கு வார்டு வாரியாகவே உறுப்பினர்கள் அதிகம் என்பதால் வார்டு முதல் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகள் வரை போட்டியிட பலரும் விருப்பமனு அளித்து வருகின்றனர். ஆனால் கூட்டணி இல்லாமல் தனியே உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் சிறிய கட்சிகளும், தேசிய கட்சிகள் சிலவும் வேட்பாளர் பஞ்சத்தை சந்தித்துள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

மாநில அளவிலான சிறிய கட்சிகள் சில குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் செல்வாக்கு பெற்றுள்ளன. அவை அந்த மாவட்டங்களில் பஞ்சமின்றி வேட்பாளர்களை நிறுத்தி வரும் நிலையில், வலு இல்லாத மாவட்டங்களில் தேர்தலை கைவிடலாமா என பேசி வருவதாக கூறப்படுகிறது. தேசிய கட்சிகள் மற்றும் புதிதாக தொடங்கபட்ட சில கட்சிகளுக்கு பல பகுதிகளில் வார்டுகளில் தொண்டர்களே இல்லை எனும்போது வேட்பாளர்களை நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பல கட்சிகள் பெரிய கட்சிகள் போல அனைத்து இடங்களிலும் போட்டியிடாமல் வெற்றி வாய்ப்பு உள்ள பகுதிகளில் மட்டும் போட்டியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுதவிர கடந்த சட்டமன்ற தேர்தலில் வழங்கப்பட்ட இடங்களில் மீதியை தாராளமாக திரும்ப அளித்த கட்சி உட்பட பல கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் இருந்து மொத்தமாக ஒதுங்கியுள்ளதாக தகவல். எனினும் குறிப்பிட்ட சில பகுதிகளில் போட்டியிடும் கட்சிகள், சுயேச்சைகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்