தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றிரவு அதுகுறித்தான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது. தற்போது அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 3:30 மணிக்கு புதிய அமைச்சர்களின் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.
தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வசம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஓழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் ஆகிய துறைகள் இருக்கும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் வசம் இருந்த திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத்துறையும் உதயநிதிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டதன் மூலம், அமைச்சரவையில் 10-ஆவது இடத்தில் உள்ள உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சருக்கு அடுத்தபடியாக, 2-ஆவது இடத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளார். புதிய பொறுப்புகளால், கட்சியில் மட்டுமல்லாது, ஆட்சி நிர்வாகத்திலும் அடுத்த கட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நகர்ந்துள்ளார்.