ஆட்சியை ஏன் கவிழ்க்கவில்லை? - மு.க.ஸ்டாலின் விளக்கம்

Webdunia
புதன், 14 பிப்ரவரி 2018 (11:43 IST)
தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்கு திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

 
ஜெ.வின் மறைவிற்கு பின் தீபா, ஓ.பி.எஸ், எடப்பாடி, தினகரன் என பல பிரிவுகளாக அதிமுக உடைந்தது. ஆனாலும், நடைபெறும் ஆட்சியை கவிழ்ப்பதற்கு திமுக எந்த நடவடிக்கைகளும் இறங்கவில்லை. எனவே, கருணாநிதி இருந்திருந்தால் இந்நேரம் ஆட்சியை கவிழ்த்திருப்பார் என அரசியல் தலைவர் முதல் பொதுமக்கள் வரை பலரும் பேசத் தொடங்கினர். இதற்கு ஸ்டாலின் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. தற்போது அதற்கான பதிலை அவர் அளித்துள்ளார்.
 
திருவள்ளூரில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும்போது “ கலைஞரின் ஆட்சியைத்தான் இரண்டு முறை மத்திய அரசு கலைத்தது. ஆனால், ஆட்சியை கவிழ்க்க கலைஞர் ஒருமுறை கூட நினைத்தது இல்லை. ஜெ.விற்கும், ஜானகிக்கும் இடையே பிரச்சனை வந்த போது, ஆட்சியை கவிழ்க்குமாறு பல கட்சிகள் கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்தன. ஆனால், ஜனநாயகத்திலும், மாநில சுயாட்சியிலும் நம்பிக்கை கொண்டிருக்கும் திமுக ஒருபோதும் ஆட்சி கவிழ்ப்பிற்கு துணை நிற்காது என கலைஞர் மறுத்துவிட்டார். எனவே, நாங்களும் அதை தொடர்ந்து கடைபிடிப்போம். மக்கள் ஆதரவோடு தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம்” என அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்