நேர்மையான அதிகாரியை புறக்கணிக்கும் செங்கோட்டையன் - பின்னணி என்ன?

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (10:40 IST)
தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் கல்வித்துறை மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டத்தில், கல்வித்துறையில் பல அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்த கல்வித்துறை செயலாளர் உதயசந்திரனுக்கு அழைப்பு இல்லாத விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கல்வித்துறை செயலாளராக உதயசந்திரன் பொறுப்பேற்ற பின் பொதுத் தேர்வுக்கான தரவரிசை ரத்து, 11ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என பல அதிரடி நடவடிக்களை அவர் மேற்கொண்டு பலரின் பாராட்டுகளை பெற்றார். மேலும், நேர்மையான அதிகாரி எனவும் பேரெடுத்தார். 
 
மேலும், பள்ளிக் கல்வித்துறையில் பணி நியமனம், பணி மாறுதல் ஆகிய விவகாரங்களில் நடைபெற்ற முறைகேடுகளில் இவர் நேர்மையாக நடந்து கொண்டதால், இவருக்கும், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் இருந்து வந்ததாக தெரிகிறது. 
 
எனவே, உதய சந்திரனை மாற்றும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியது. ஆனால், அதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அவரை வேறு பணிக்கு மாற்றக்கூடாது என சென்னை நீதிமன்றமும் உத்தரவிட்டது.
 
இந்நிலையில்,செங்கோட்டையன் தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் கல்வி மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு கல்வித்துறையை சார்ந்த பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், துறையின் செயலாளரான உதயசந்திரனுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. 
 
நேர்மையான அதிகாரியை அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்து வருவது சமூக ஆர்வலர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்