காலியாகும் அமமுக கூடாரம்… பெங்களூருக்கு வரசொன்ன சசிகலா ! – தர்மசங்கடத்தில் தினகரன்

Webdunia
சனி, 29 ஜூன் 2019 (15:10 IST)
அமமுகவை விட்டு ஒவ்வொருவராகக் கிளம்பி சென்று வேறு கட்சிகளில் சேர்வதால் அதிருப்தியில் இருக்கும் சசிகலா  தினகரனை உடனடியாக வர சொல்லி உத்தரவு போட்டுள்ளாராம்.

அதிமுக பிளவு, சசிகலா தண்டனை ஆகியவற்றால் புதிதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார் தினகரன். தனது ஆதரவாளர்களுடன் ராஜாவாக இருந்த தினகரன்  ஆர் கே நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சி, திமுக ஆகியவற்றைத் தோற்கடித்து நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்தார். ஆனால் அதன் பின்னர் அடுத்தடுத்து எடுத்த நடவடிக்கைகளால் அவரது கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர். பலர் கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். மக்களவை மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் அமமுகவுக்குப் பேரிடியாக விழுந்துள்ளது.

டிடிவி தினகரன் மேல் எழுந்த அதிருப்தியால் அவரது வலது மற்றும் இடது கரங்களாக திகழ்ந்த செந்தில் பாலாஜி மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்துள்ளது அமுமுகவின் பெறும் சரிவாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கீழ்மட்டத்தில் உள்ள தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சிலரும் கட்சியில் இருந்து விலகி மற்றக் கட்சிகளில் சேர்ந்து வருவதால் சசிகலா வருவதற்குள் கட்சியே காலியாகி விடுமோ என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த செய்திகளைக் கேட்டு கலவரமான சசிகலா, பெங்களுர் சிறைக்கு வர சொல்லி டிடிவி தினகரனுக்கு உத்தரவு போட்டுள்ளாராம். இதைக்கேட்டு தினகரன் சசிகலா கேட்கப்போகும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என தர்மசங்கடத்தில் உள்ளதாக அமமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்