மழை நீரை அகற்றவில்லை.. குடிநீர், மின்சாரம் இல்லை! – அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட மக்கள்!

Webdunia
புதன், 6 டிசம்பர் 2023 (14:42 IST)
சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் பார்வையிட சென்ற அமைச்சர் சேகர்பாபுவை மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடந்த இரண்டு நாட்களாகிவிட்ட போதிலும் இன்னும் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் மக்கள் குடிநீர், மின்சாரம் இன்றி இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் புயலால் பாதித்த வண்ணாரப்பேட்டை பகுதிக்கு ஆய்வுக்கு சென்ற அமைச்சர் சேகர்பாபு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது குடியிருப்புகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை இல்லை என்றும், குடிநீர், மின்சாரம் இன்றி தவிப்பதாகவும் புகார் அளித்ததுடன் மக்கள் அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு எழுந்துள்ளது. தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பும் என்றும், பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்