சென்னை பொத்தேரியில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இது கல்லூரியா? அல்லது கஞ்சா ஆலையா? என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் பழக்கம் இருப்பதாக கூறப்படுவதை அடுத்து திடீரென 500க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.
500 அடுக்குமாடி வீடுகளில் நடந்த சோதனையில் 19 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சோதனையில் கஞ்சா அரை கிலோ, கஞ்சா சாக்லேட் ஆறு , கஞ்சா ஆயில் 20 எம் எல் பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி பாங் 5, ஸ்மோக்கிங் பாட் 1, ஹூக்கா மெஷின் 7, ஹூக்கா பவுடர் 6 கிலோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து கூடுதல் ஆணையர் மகேஸ்வரி தலைமையில் தாம்பரம் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் கல்லூரியை சேர்ந்த மேலும் சில மாணவர்களிடம் போலீஸ் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.