என்.ஐ.டி. மாணவியிடம் பாலியல் அத்துமீறல்.! நேற்று இரவு முதல் தொடரும் போராட்டம்.! திருச்சியில் பரபரப்பு..!!

Senthil Velan

வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (08:48 IST)
திருச்சி என்.ஐ.டி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
திருச்சி என்.ஐ.டி மாணவிகள் விடுதியில் மாணவர்களின் வசதிக்காக ஒவ்வொரு அறையிலும் இணையதள சேவை அளிப்பதற்காக நேற்று காலை ஒப்பந்த ஊழியர்கள் 5 பேர் சென்றனர். அப்போது ஒரு அறையில் மாணவி தனியாக இருக்கும் போது இணையதள சேவை அளிப்பதற்காக வந்த ஊழியர் ஒருவர் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
 
அப்போது சுதாரித்துக்கொண்ட மாணவி, அறையில் இருந்து வெளியே ஓடிவந்து சத்தம் போட்டுள்ளார். பின்னர் அங்கிருந்த மற்ற மாணவிகள், அந்த ஒப்பந்த ஊழியரை  பிடித்து திருவெறும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டு நேற்று இரவே திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
இந்த நிலையில் அலட்சியமாக நடந்து கொண்ட கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து என்.ஐ.டி வளாகத்தில் இரவு முதல் மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒப்பந்த ஊழியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவி கூறிய போது, அங்குள்ள பெண் வார்டன் மாணவி அணிந்திருந்த ஆடை குறித்து தரை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. 


ALSO READ: எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான இறுதி ஒதுக்கீடு..! விவரங்கள் இன்று வெளியீடு..!!


அத்துமீறலில் ஈடுபட்ட நபரை மரியாதையாகவும், பாதிக்கப்பட்ட மாணவியைத் தரக்குறைவாகவும் கல்லூரி நிர்வாகம் நடத்தியதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். மாணவியை தரக்குறைவாக பேசிய பெண் வார்டனை மாற்ற வேண்டும் என்றும் விடுதி காப்பாளர்கள் மூன்று பேரும் சம்பந்தப்பட்ட மாணவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்