பிரபல சினிமா ஒளிப்பதிவாளரான பிசி ஸ்ரீராம் தனது ட்விட்டரில் இட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இந்திய தொழிலதிபர் அதானியின் நிறுவனம் சர்வதேச அளவில் வர்த்தக மோசடி செய்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பெர்க் நிறுவனம் வெளியிட்ட புகார் அறிக்கை கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
இந்நிலையில் இன்று அதானி குழுமம் ஹிண்டென்பெர்கின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து 400+ பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் “ஹிண்டென்பெர்க் நிறுவனத்தின் இந்த குற்றச்சாட்டு அதானி குழுமத்தின் மீதானது மட்டுமல்ல இந்தியாவை அவமரியாதை செய்யும் நோக்கம் கொண்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிண்டென்பெர்க் நிறுவனமோ, அதானி தேசியவாதத்தின் போர்வையில் பண மோசடி செய்வதாக தனது அறிக்கையில் விமர்சித்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த மோதலுக்கு இடையே தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிசிஸ்ரீராம் “அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி – சாமுவேல் ஜாக்சன்” என பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் சர்ச்சையான நிலையில் பலரும் அந்த பதிவின் கமெண்டில் வந்து அவரை விமர்சித்து வருகின்றனர். மேலும் பலர் அதை சொன்னவர் சாமுவெல் ஜான்சன் என்றும் கூறி வருகின்றனர். அதானி குறித்து பிசிஸ்ரீராம் இவ்வாறு மறைமுகமாக விமர்சிப்பதாக பலரும் பேசி வருகின்றனர்.