தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே 34 வயது பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், பொள்ளாச்சி பாலியல் வழக்குத் தீர்ப்பு வெளியாகிய அதே நாளில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால், அரசுக்கு எதிரான பரபரப்பை தவிர்க்கவே போலீசார் இதை வெளியிடாமல் மூடி வைத்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் கும்பகோணத்தில் உள்ள சிமென்ட் கடையில் பணியாற்றி வந்தார். அதே கடையில் பணியாற்றிய சண்முகபிரபு, பாஸ்கர், பிரகதீஸ்வரன் ஆகியோர் மே 12ஆம் தேதி பணி முடித்து வீடு திரும்பிய அந்த பெண்ணை பின் தொடர்ந்தனர். பின்னர், உமாமகேஸ்வரபுரம் பகுதியில் அமைதியான இடத்திற்கு இழுத்துச் சென்று, அங்கு காத்திருந்த சரவணன் என்பவருடன் சேர்ந்து, அந்தப் பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினர். சம்பவத்தை வீடியோவும் எடுத்தனர்.
பின்னர் அவரை மிரட்டி வெளியில் எதையும் பேச வேண்டாம் எனக் கூறினர். மன உளைச்சலுடன் இருப்பதைக் கண்டு, அவருடைய சகோதரர்களிடம் அவர் நிகழ்ந்ததை பகிர்ந்துள்ளார். மே 13ஆம் தேதி, அவர் ஆடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்க, நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.