மலைவாழ் மக்களுக்குப் பாதுகாவலனாக நமது பிரதமர் மோடி - அண்ணாமலை

sinoj
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (20:21 IST)
18 வது மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
 
இந்த நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரம்  மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 
 
இன்றைய தினம் காலை, கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, ஆனைக்கட்டி, தடாகம், சின்னதடாகம், கணுவாய், P&T காலனி, கவுண்டம்பாளையாம் பகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பாஜகவின் தாமரை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தோம்.
 
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு   நரேந்திரமோடி அவர்கள் தலைமையில் பத்து ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. வரும் பாராளுமன்றத் தேர்தலில், நமது பிரதமர் திரு மோடி அவர்கள், 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்கவிருப்பது உறுதி. நமது பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்களைத் தவிர, பிரதமர் பதவிக்குத் தகுதியான வேறு தலைவர்கள் யாரும் இல்லை. நமது பிரதமரிடம் உதவிகளைப் பெற்று, நமது கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கு என்னென்ன நலத்திட்டங்களை எல்லாம் கொண்டு வரலாம் என்று சிந்திக்கக் கூடிய பாராளுமன்ற உறுப்பினர் நமக்குத் தேவை. இத்தனை ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், கோயம்புத்தூரின் வளர்ச்சியைக் குறித்துச் சிந்திக்கவில்லை.
 
 
திமுகவைப் பொறுத்தவரை, குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் ஏமாற்றுவாதிகள். குறிப்பாக, இந்தப் பகுதிகளில் உள்ள செங்கல் சூளை பிரச்சினையை உருவாக்கியதே திமுக அரசுதான். மூன்று ஆண்டுகளாக, பொதுமக்கள் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமல் இருந்துவிட்டு, தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதிகள் அளிப்பார்கள். மத்திய அரசின் பக்கமிருந்து, செங்கல் சூளைகளுக்கு எந்தப் பிரச்சினையும் வராது என்று உறுதி அளிக்கிறேன். திமுக அரசை எதிர்த்துப் போராடும் பொதுமக்களோடு நின்று, செங்கல் சூளைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்.
 
 
ஆனைக்கட்டி உள்ளிட்ட பழங்குடி சமூக, மலைவாழ் மக்கள் வாழும் மலைக்கிராமங்களை மேம்படுத்த ஆதி ஆதர்ஷ் திட்டம் மூலம், சாலைகள் அமைப்பது, வீடுகள் கட்டிக் கொடுப்பது, குழந்தைகளின் தரமான கல்விக்கு ஏகலைவா பள்ளிகள் அமைப்பது எனப் மத்திய அரசு செய்துள்ள பணிகள் ஏராளம். இந்தியாவின் முதல் குடிமகள் என்ற உயரிய குடியரசுத் தலைவர் பதவிக்கு, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த அம்மா திரௌபதி முர்மு அவர்களைத் தேர்ந்தெடுத்ததும் நமது பிரதமர் மோடி அவர்கள்தான். அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கான நிதி மத்திய அரசிடம் இருந்தே வருகிறது.
 
பிரதமராக நமது அன்புக்குரிய திரு  நரேந்திரமோடி அவர்கள் வந்த பிறகுதான், மலைவாழ் பகுதிகளில் அரசின் வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன. பழங்குடி சமூகத்தின் புகழைப் போற்ற மத்திய அரசின் சார்பில் பழங்குடியினர் தினம் கொண்டாடப்படுகிறது. மலைவாழ் மக்களுக்குப் பாதுகாவலனாக நமது பிரதமர் திரு  நரேந்திரமோடி அவர்கள் இருக்கிறார். 
 
ஊழலில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு, வாக்குகளுக்குப் பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்று திமுகவினர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால், தமிழக அரசியலில் இப்போது மாற்றம் இல்லையென்றால் எப்போதும் இல்லை என்பதில் நமது இளைஞர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
 
மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல், இயற்கையும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட, மத்திய அரசின் திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைக்க, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இயற்கையோடு இணைந்த வளர்ச்சி கிடைத்திட, மனிதன், வன விலங்குகள் மோதல் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிட, நமது அடுத்த தலைமுறை குழந்தைகளின் எதிர்காலத்துக்காக, எளிய சாமானிய மக்களின் சின்னம், நமது பிரதமர் மோடி அவர்களின் சின்னம், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சின்னம், பாஜகவின் சின்னமாம் தாமரை சின்னத்தில், கட்சி வேறுபாடின்றி வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், உங்கள் அன்பை முழுவதும் பெற்றுள்ள அண்ணாமலை ஆகிய என்னை, வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்''என்று தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்