இன்னும் 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாகவும் இதனை அடுத்து ஐந்து மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரு பக்கம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் வங்கக்கடலில் காற்றழுத்தம் தோன்ற இருப்பதை அடுத்து ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் சில மாவட்டங்களில் 20 சென்டிமீட்டர் வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பதிவாகி வரும் நிலையில் இன்றும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .