எம்ஜிஆர் பெயரில் திமுக பப்ளிசிட்டி செய்கிறது! – ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (16:07 IST)
எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவை ஒட்டி அரசு வெளியிட்ட செய்தியில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக கட்சியை தொடங்கியவரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் பிறந்தநாள் கடந்த 17ம் தேதி கொண்டாடப்பட்டது. எம்ஜிஆரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவதாக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டதுடன், கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்நிலையில் எம்ஜிஆர் குறித்து திமுக அரசு வெளியிட்டுள்ள அரசு செய்தி குறிப்பில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் “எம்ஜிஆர் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவதாக திமுக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கருணாநிதி அவர்கள் கதை, வசனம் எழுதிய படங்களில் நடித்து எம்ஜிஆர் பிரபலம் ஆனதாகவும், அவருக்கு கருணாநிதி சூட்டிய புரட்சி நடிகர் என்ற பட்டம்தான் பின்னாட்களில் புரட்சி தலைவராக மாறியதாகவும், மேலும் கிண்டி எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்திற்கு திமுக ஆட்சியில் எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டதாகவும் அடுக்கடுக்கான திரிபுகளை வெளியிட்டுள்ளனர்” என குற்றம் சாட்டியுள்ளார்.

“முன்னாள் முதல்வர் கருணாநிதி கதை, வசனம் எழுதிய படங்களை தாண்டியும் எம்.ஜி.ஆர் மக்களிடையே மிகவும் பிரபலம் ஆனவர். மக்கள்தான் அவருக்கு புரட்சி தலைவர் என பெயரிட்டு அழைத்தனர். கிண்டி மருத்துவ பல்கலைக்கழகம் எம்ஜிஆர் உயிரோடு இருந்த போதே, அதிமுக ஆட்சியிலேயே டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்