சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க ப்ளார்பார்ம் டிக்கெட் எடுத்துவிட்டு நீண்ட நேரம் ரயில் நிலையத்தில் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் ரயில்களின் நுழைவாயிலாக சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் விளங்கி வருகிறது. தினம்தோறும் பல மாநிலங்களுக்கும் இங்கிருந்து ரயில்கள் இயக்கப்படும் நிலையில் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். அதில் பலர் ரயிலுக்கு தாமதமாவதால் அங்கேயே படுத்துத் தூங்குவதால் பிற பயணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுவதாக புகார்கள் உள்ளது.
இது தவிர ரயில் ஏற வந்தவர்களை வழி அனுப்ப வந்தவர்கள் நீண்ட நேரம் ரயில் நிலையத்திற்குள் இருப்பது, அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்க்க வரும் மக்கள் இரவு நேரங்களில் செண்ட்ரலில் ப்ளாட்பார்ம் டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே சென்று தூங்கிவிடுவது போன்ற செயல்களால் மற்ற பயணிகள் தங்கள் ரயிலை பிடிக்கச் செல்வதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள சென்னை செண்ட்ரல் ரயில்வே போலீஸ், இனி ப்ளாட்பார்ம் டிக்கெட் எடுத்திருந்தாலும் நீண்ட நேரம் ரயில் நிலையத்திற்குள் இருந்தால், உறங்கினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
Edit by Prasanth.K