தவெக தலைவர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம்.. சென்னை ஐகோர்ட்டில் விசாரணை..!

Siva

புதன், 24 செப்டம்பர் 2025 (09:19 IST)
தவெக தலைவர் விஜய் வருமானத்தை மறைத்ததாக கூறி அவருக்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது.
 
கடந்த 2015-ஆம் ஆண்டு, நடிகர் விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, 'புலி' திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு வழங்கப்பட்ட ரூ.15 கோடி வருமானத்தை அவர் தனது கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை கண்டறிந்தது.
 
இதையடுத்து, 2016-2017 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை ஆய்வு செய்த அதிகாரிகள், வருமானத்தை மறைத்ததாகக் கூறி, கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
 
இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது, உயர்நீதிமன்றம் வருமான வரித்துறையின் உத்தரவுக்குத் தற்காலிகத் தடை விதித்தது.
 
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஜய் தரப்பு வழக்கறிஞர், "வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான அபராதம் 3 ஆண்டுகளுக்கு பிறகு விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.
 
வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "வருமான வரிச் சட்டத்தின்படியே இந்த அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை சரியானதுதான். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று எதிர்வாதம் செய்தார்.
 
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இது போன்ற மற்றொரு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகலை தாக்கல் செய்ய விஜய் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்