உத்தரப்பிரதேசத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். 'ஐ லவ் முஹம்மது' என்ற பதாகைகள் விவகாரத்தை தொடர்ந்து பரேலியில் நிகழ்ந்த வன்முறை மற்றும் போலீசாருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே நடந்த மோதலுக்குப் பிறகு, இந்த கடுமையான எச்சரிக்கையை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விடுத்துள்ளார்.
"கலவரக்காரர்கள் நாங்கள் யார் என்பதை மறந்துவிட்டனர்; நாங்கள் யார் என்பதை அவர்களுக்கு உணர்த்தி விட்டோம். இனிமேல் தடை இல்லை, ஊரடங்கு உத்தரவு இல்லை, ஆனால் எதிர்கால தலைமுறைக்கு கலவரம் என்றால் என்ன என்பதே தெரியாத அளவுக்கு பாடம் கற்பிப்போம். சமூக விரோதிகள் மற்றும் கலவரக்காரர்களுக்கு, அவர்களது ஏழு தலைமுறைகளுக்கும் நினைவிருக்கும் அளவுக்கு பாடம் புகட்டப்படும்," என்று தெரிவித்தார்.
மேலும், கலவரக்காரர்களை சமாளிக்கவே தங்கள் அரசாங்கம் புல்டோசர்களை உருவாக்கியுள்ளது என்றும், அமைதி மற்றும் ஒழுங்கை நிலைநாட்ட இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
2017-க்கு முன்னர், இதுபோன்ற நிகழ்வுகள் சாதாரணமாக இருந்தன. ஆனால் தனது அரசாங்கம் இந்த கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக அவர் கூறினார். இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.