பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை!?? – கொண்டாட்டத்தில் அரசு ஊழியர்கள், மாணவர்கள்

Webdunia
வியாழன், 12 செப்டம்பர் 2019 (10:03 IST)
இன்னும் தீபாவளியே வராவிட்டாலும் கூட பொங்கலுக்கான பரபரப்பு மக்களிடையே தொற்றிக் கொண்டுள்ளது.

பொங்கலுக்கு ஊருக்கு செல்வதற்கு இன்றே முன்பதிவு தொடங்கியுள்ளது. ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே விற்று தீர்ந்தது. இந்நிலையில் பள்ளி குழந்தைகள் மாத காலண்டரை எடுத்து விடுமுறையை கணக்கிடுவது போல பொங்கல் விடுமுறையை கணித்து ஆனந்த கூத்தாடுகிறார்கள் மக்கள்.

ஆமாம்! பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது என்றால் காலண்டரை புரட்டாமல் இருக்க முடியுமா? 2020ம் ஆண்டுக்கான பொங்கல் விழா ஜனவரி மாதம் 15ம் தேதி புதன்கிழமை தொடங்குகிறது. ஜனவரி 11,12 ஆகிய தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் விடுமுறை. 14ம் தேதி போகியை தொடர்ந்து 3 நாட்களுக்கு பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் வந்துவிடுகிறது. பிறகு மீண்டும் சனி, ஞாயிறு விடுமுறை.

ஆக மொத்தம் 8 நாட்கள் விடுமுறை. இடையே 13ம் தேதி திங்கட்கிழமை மட்டும் வேலைநாள். அந்த ஒருநாளுக்கு மட்டும் விடுப்பு எடுத்து கொள்ளலாம் அல்லது பொங்கல் அமளி துமளிகளை முன்னிட்டு தமிழக அரசே திங்கட் கிழமையயும் சேர்த்து விடுமுறையாக அறிவித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏதாவது அரசு விடுமுறை சனி, ஞாயிறுகளில் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்கள் கடுப்பாகி விடுவார்கள். இப்போது முழுதாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்றால் கொண்டாட்டத்தை சொல்லவா வேண்டும். அரசு ஊழியர்களும், வெளியூர்களில் வேலை செய்வோரும் இந்த 9 நாட்கள் விடுமுறையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்