கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி கமலாத்தாள். தனிமையில் வாழ்ந்து வரும் இவருக்கு தெரிந்ததெல்லாம் இட்லி வியாபாரம் மட்டுமே! கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்று வருகிறார் கமலாத்தாள். அந்த பகுதியில் அலுவலகம் செல்லும் ஊழியர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் ஆகியோருக்கு பல ஆண்டுகளாக குறைந்த விலைக்கு இட்லி சுட்டு விற்று வருகிறார் கமலாத்தாள்.
இன்றைய நாளில் ஒரு ரூபாய்க்கு இட்லி கிடைப்பதெல்லாம் பெரிய சாதனைதான். அப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்தி காட்டிய கமலாத்தாள் பற்றி சோசியல் மீடியாக்களில் இளைஞர்கள் சிலர் பதிவிட்டுள்ளனர். இதனால் கமலாத்தாள் கடை புகழ் கோயம்புத்தூர் முழுவதும் பரவியது. இந்த செய்தியறிந்த கோயம்புத்தூர் ஆட்சியர் கமலாத்தாளை நேரில் அழைத்து அன்பளிப்புகள் அளித்த செய்திகள் கூட தினசரிகளில் வெளியானது.
அப்படியாக தனியார் தொலைக்காட்சி ஒன்று கமலாத்தாளை குறித்து வெளியிட்ட வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா. அந்த பதிவில் அவர் “நாம் செய்யும் ஓவொரு சாதனைகளும் கமலாத்தாளின் கதையை கேட்டால் ஒன்றுமில்லை என்றாகிவிடும். அவர் விறகு அடுப்பை உபயோகப்படுத்துவதை நான் கவனித்தேன். அவரை யாருக்காவது தெரிந்தால் என்னிடம் சொல்லுங்கள். அவருடைய தொழிலுக்கு முதலீடு செய்யவும், அவருக்கு புதிய கேஸ் அடுப்பை வாங்கி தரவும் நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.