இடஒதுக்கீடு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தீர்ப்பு: முக ஸ்டாலின் அறிக்கை

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (20:35 IST)
சமூகநீதிக்கான சங்கநாதமாக அமைந்துள்ளது என்றும், இடஒதுக்கீடு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
சமூகநீதி வரலாற்றில் இது ஒரு பொன்னாள்…. பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் குரல், சென்னை உயர்நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்….
 
ஆம்! இன்றைய தினம், “மாநிலங்கள் மத்தியத் தொகுப்பிற்கு” அளிக்கும் மருத்துவக் கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு உரிமை உண்டு” என்று, சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, மாண்புமிகு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரைக் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
 
திராவிட முன்னேற்றக் கழகம் தொடுத்த சமூகநீதி சட்டப் போராட்ட வழக்கில்- இந்தத் தலைமுறை மட்டுமின்றி- எதிர்காலத் தலைமுறையையும் முன்னேற்றிக் காப்பாற்றும் போற்றுதலுக்குரிய சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருப்பது; பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது என்றால் மிகையாகாது.
 
மண்டல் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட போது, 'சமூகநீதிக் காவலர்' மறைந்த வி.பி.சிங் அவர்களைப் பாராட்டி- அவருக்கு நன்றி தெரிவித்து 21.8.1990 அன்று தமிழகச் சட்டப்பேரவையில், “முழுமையாக மண்டல் குழு பரிந்துரைகளையோ அல்லது மண்டல் குழுவினுடைய பரிந்துரைகளுக்கும் அப்பாற்பட்ட, இன்னும் மேலாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளையோ, சலுகைகளையோ நாம் பெற வேண்டுமென்று வாதாடுதவற்கு ஒரு அடித்தளம் அமைக்கப்பட்டிருக்கிறது” என்று, சரித்திரம் போற்றும் தீர்மானத்தை நிறைவேற்றினார் தலைவர் கலைஞர் அவர்கள். அந்தத் தீர்மானத்தின் வழிநின்று அயராது போராடி, இன்றைக்கு இந்த வழக்கில் தீர்ப்பை – சமூக நீதியைப் பெற்றிருக்கிறது, திராவிட முன்னேற்றக் கழகம்.
 
இன்றைய உயர்நீதிமன்றத் தீர்ப்பில்; “இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்ற மருத்துவக் கவுன்சில் வாதத்தை நிராகரித்து”, “மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க சட்டரீதியாக எந்தத் தடையும் இல்லை” என்று குறிப்பிட்டு, “திறமை (Merit) என்று காரணம் கூறி ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்க முடியாது. அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை” என்று, அழுத்தம் திருத்தமாக மாண்புமிகு நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பு; நான்கு ஆண்டுகளாக, “இல்லாத ஒரு காரணத்தைக் கூறி” பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இந்திய மருத்துவக் கழகமும், மத்திய பா.ஜ.க அரசும் கூட்டணி அமைத்து- இழைத்து வந்த அநீதிக்கு ஒரு முடிவு கட்டியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
 
மண்டல் கமிஷன் பரிந்துரைக்குச் செயல்வடிவம் கொடுத்து, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்ட நேரத்தில் தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சிக்கடலில் நீந்தியது. அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்,
 
“ஒதுக்கியே தீர்வது
 
ஒடுக்கப்பட்டோருக்கு
 
இடஒதுக்கீடு என
 
எதிர்நீச்சல் போட்டு
 
எழுந்து நின்றது
 
திராவிட இயக்கம்”
 
- என்று எழுதிய “மண்டல் கவிதை” வரிகள்தான், என் நினைவில் மட்டுமல்ல; ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட- மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் ரத்த நாளங்களில் ஜீவனாக இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது.
 
ஓர் ஆண்டு அல்ல; நான்கு ஆண்டுகளாக இந்த இட ஒதுக்கீட்டை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு நிராகரித்து வந்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திரு. வில்சன் அவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதி, இந்த இடஒதுக்கீட்டைத் தருமாறு - குறிப்பாக மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 50 சதவீத இடங்களை - மத்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு ஒதுக்கிட வேண்டும் என்று நேரிலும், மனு மூலமாகவும் பலமுறை வலியுறுத்தினார்.
 
கழக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு அவைகளிலும் இந்தச் சமூகநீதிக்காகக் குரல் கொடுத்தார்கள்.
 
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு நானே கடிதம் எழுதி, "பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் இடஒதுக்கீட்டை வழங்குங்கள்!" என்று வலியுறுத்தியிருக்கிறேன்.
 
நேற்றைய தினம் கூட அகில இந்தியத் தலைவர்களுக்கெல்லாம் கடிதம் எழுதி- மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களுக்குரிய இடஒதுக்கீட்டைப் பெறும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் - குரல் எழுப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
 
அரசியல் ரீதியாக தீவிர அழுத்தம் கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகம், உச்சநீதிமன்றத்திலும் - உயர்நீதிமன்றத்திலும் மருத்துவக் கல்வி இடங்களில் இடஒதுக்கீடு கோரி - ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகள், மத்திய அரசு கல்வி வேலைவாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காகக் கொண்டு வந்த சட்டங்கள், தமிழ்நாட்டில் கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீடு ஆகியவற்றை விவரமாக முன்னிறுத்தி- நமது சட்டப் போராட்டத்தையும் இடைவிடாது நடத்தி வந்தோம்.
 
இந்த நிலையில்தான், “மருத்துவக் கல்வியில் 27 சதவீத இடஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு வழங்கத் தயார்” என்று, மத்திய பா.ஜ.க. அரசு உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் மூலம் ஒப்புக்கொண்டாலும், சில நிபந்தனைகளை விதித்து- ஏமாற்றத்தையும் சேர்த்தே கொடுத்தது.
 
அதே நேரத்தில், இந்திய மருத்துவக் கழகத்தை விட்டு, “மத்தியத் தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட வைத்த மத்திய பா.ஜ.க.அரசு - “பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டி விடும்” வேலையைப் பார்த்தது.
 
ஆனால் நமது கழக வழக்கறிஞர்கள் - இந்த வழக்கில் பங்கேற்ற மற்ற கட்சிகளின் வழக்கறிஞர்கள் எல்லாம் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு அநீதியை, சென்னை உயர்நீதிமன்றம் முன்பு மிகத் தெளிவாகவும் - ஆணித்தரமாகவும் எடுத்துரைத்து வாதிட்டதால், இன்றைக்கு, “மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கும் மருத்துவக் கல்வி இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு உண்டு; அதற்கு உரிமை உள்ளது. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் கோரிக்கையில் நியாயம் உள்ளது” என்று தீர்ப்பளித்துள்ளது, சென்னை உயர்நீதிமன்றம்.
 
மேலும், “மத்திய அரசு - மாநில அரசு - இந்திய மருத்துவக் கழகம் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து இடஒதுக்கீட்டை மூன்று மாதங்களுக்குள் வழங்கிட வேண்டும்” என்றும் உயர்நீதிமன்றம் காலவரம்பு நிர்ணயித்துள்ளது.
 
இத்தீர்ப்பினைப் பெறக் காரணமாக இருந்த மூத்த வழக்கறிஞர் - மாநிலங்களவை உறுப்பினர் திரு. வில்சன் அவர்களுக்கு சிறப்புப் பாராட்டுகளையும் – அவர் உள்ளிட்ட வாதிட்ட மற்ற வழக்கறிஞர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இடஒதுக்கீடு வரலாற்றில் இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தீர்ப்பு.
 
நாம் சுதந்திரம் பெற்றவுடன் - தமிழ்நாட்டின் சமூக நீதிப் போராட்டத்தின் விளைவாக வந்த முதல் அரசியல் சட்டத்திருத்தம் போல், இன்றைக்கு 73 ஆண்டுகள் கழித்து வந்துள்ள சமூகநீதிக்கான சங்கநாதமாக இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.
 
இந்தத் தீர்ப்பைப் பெறுவதில் ஒட்டுமொத்தத் தமிழகமே ஓரணியில் நிற்பதன் அடையாளமாக - ஒருமித்த கருத்துடன் தோளோடு தோள் நின்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் - வாதிடும் வகையில் - வழக்குத் தொடுத்த அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும், உயர்நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்ததற்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
திராவிடத்தால் பண்படுத்தப்பட்ட தமிழ் மண்; சமூகநீதி மண் என்பதை, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் மீண்டுமொருமுறை உணர்த்தியுள்ளது இந்தத் தீர்ப்பு.
 
இந்தத் தீர்ப்பினை ஏற்று - கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 3 மாதம் வரை மத்திய பா.ஜ.க. அரசு காத்திராமல் - உடனடியாகக் கமிட்டியை அமைத்து - மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீட்டின்படி- குறிப்பாகத் தமிழகம் மத்தியத் தொகுப்பிற்கு ஒப்படைக்கும் மருத்துவக் கல்வி, பல் மருத்துவம், மற்றும் மருத்துவ முதுநிலைக் கல்வி இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இந்தக் கல்வியாண்டிலேயே வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
 
4 ஆண்டுகளாக வீழ்த்தப்பட்டிருக்கும் சமூகநீதியை வழங்க மத்திய பா.ஜ.க. அரசுக்கு 24 மணி நேரம் கூடப் போதும் - அதுவும் பிரதமராகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் இருக்கும் போது - அந்த நேரம் கூடத் தேவைப்படாது என்பதில் இன்னமும் கூட ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். அதே நேரத்தில், சமூகநீதிக்கான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மீது மத்திய பா.ஜ.க. அரசு மேல்முறையீடு எதுவும் செய்திடக் கூடாது என்றும், தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் சார்பாக மட்டுமல்ல; நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்.
 
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் 27 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டவுடன் நடத்திய கவியரங்கில்- “தலைமை”க் கவிதையாக கலைஞர் அவர்கள் பாடிய “தணல்” கவிதையில் சபதமேற்றது போல், இன்று – இந்தத் தீர்ப்பு வெளிவந்துள்ள வேளையில்,
 
ஆட்சியில் இருப்பினும் இல்லாதிருப்பினும்
 
தன்மானம் உயிரென மதிப்போம்!
 
இனமானம் என்றுமே காப்போம்!!
 
கடைசி பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட - பட்டியலினத் தோழனுக்கும் சமூகநீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்!!!
 
- என்று இந்த இனிய வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்