சமீப காலமாக திமுக பிரமுகர்கள் பேசுவது சர்ச்சையாகி உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த சில நாட்களாக திமுக பிரமுகர்கள் பொதுவெளியில் பேசும் தகவல்கள் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. இதுகுறித்து சமூக வலைதளங்களில் அடிக்கடி வாக்குவாதங்கள் எழும் நிலையில் திமுகவினர் பலர் அதில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் “எக்காரணம் கொண்டும் சொல்லிலும், செயலிலும் அலட்சியமான போக்கை கடைபிடிக்க வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள்.
அரும்பாடுபட்டு அமைந்துள்ள மக்கள் நல ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கும் எதிரிகளுக்கு உடன்பிறப்புகள் யாரும் எள்ளளவும் துணைபோக மாட்டீர்கள் என நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் சாதனைத் திட்டங்களால் நிரம்பியது நமது ஆட்சி. அதனால் மக்களிடம் நம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. நீண்ட நெடிய பேச்சில் ஒரு துணை மட்டும் எடுத்து திரித்து புழுதியை கிளப்பி அதனை எதிர்ப்புப் புயல் என நம்ப வைக்க நினைக்கிறார்கள்” என கூறியுள்ளார்.