தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எதார்த்தமானவர் என்றும், அவர் இப்தார் நோன்பில் பங்கேற்றத்தில் எந்த உள்நோக்கமும் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, அவர் விஜய்யுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக - பாஜக ஒரு பக்கம் கூட்டணி அமைத்துள்ள நிலையில், திமுக கூட்டணி இன்னொரு பக்கம் வலுவாக உள்ளது. இந்த நிலையில், கூட்டணி இல்லாமல் இருப்பது விஜய் மட்டும்தான் என்று கூறப்பட்டு வரும் சூழ்நிலையில், ஏற்கனவே 'தனித்து போட்டி' என்ற முடிவை எடுத்துள்ள சீமான் மற்றும் விஜய் ஆகிய இருவரும் இணைந்து போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இன்று சீமான் செய்தியாளர்களை சந்தித்தபோது, தவெக தலைவர் விஜய் எதார்த்தமானவர் என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். ஆனால் அதே நேரத்தில், வெற்றி - தோல்வியை தாண்டி தனித்து போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் தான் என்றும், தொடர்ச்சியாக நான்கு சட்டமன்றத் தேர்தல், இரண்டு பாராளுமன்ற தேர்தல் என நாங்கள் தனித்து போட்டியிட்டோம் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஒரு கட்சி மற்றொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது இயல்புதான் என்றும் அவர் இன்னொரு கேள்விக்கு பதில் அளித்துள்ளார். எனவே, விஜய் மற்றும் சீமான் இடையே கூட்டணி ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.