நடிகர் கமலுக்கு எதிராக ஆளும் கட்சியின் வார்த்தை தாக்குதல் தொடர்ந்தவாறே உள்ளது. இந்நிலையில் மீண்டும் அமைச்சர் ஜெயக்குமார் கமலை சீண்டும் விதமாக இன்று பேசியுள்ளார்.
நடிகர் கமல் சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளதாக கூறினார். ஆனால் அதற்கு பதில் அளிக்காத தமிழக அமைச்சர்கள் கமல் மீது தனிப்பட்ட வார்த்தை தாக்குதலை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கமல் மீது தமிழக அமைச்சர்கள் இப்படி நடந்து கொள்வதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அதிமுகவின் ஓபிஎஸ் அணியும் கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தியாகிகள் தினமான இன்று சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஜெயலலிதா இருந்த போது வாயை பொத்திக்கொண்டு இருந்த கமல் இப்போது மட்டும் பேசுகிறார். ஜெயலலிதா இருந்த போது வாயை திறந்திருந்தால் இப்போது வாயை திறக்கலாம். தைரியம் இருந்தால் கமல் அரசியலுக்கு வந்து இதை பேசட்டும். கமலுக்கு அரசியலுக்கு வர தைரியமில்லை. அவர் கூறுவதில் உண்மையில்லை. அரசின் மீது சேற்றை வாரி வீசுகிறார் என கூறினார்.