தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாளுக்கு நாள் விலைவாசி விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் லிட்டருக்கு இரண்டு ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் ஆவின் பால் மட்டும் இன்றி பல தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஆரோக்கியா பால் நிறுவனம் இன்று முதல் லிட்டருக்கு இரண்டு ரூபாய் விலை உயர்த்தியுள்ளது. இதை அடுத்து இதுவரை 65 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பால் விற்பனை ஆகி வந்த நிலையில், இன்று முதல் ஆரோக்கிய பால் 67 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பால் சார்ந்த உணவு பொருள்கள் விலை உயர்ந்துள்ளதால் ஆரோக்கிய பால் விலையும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பால் மூலப் பொருள்கள் விலை உயராத நிலையில் பால் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. உடனடியாக பால் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் பால் விலையை உயர்த்துவதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அரசே பால் கொள்முதல் மற்றும் விற்பனை ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.