சலூனில் வழுக்கை தலையில் முடி நட்ட மருத்துவ மாணவர் பலி: சென்னையில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2016 (14:42 IST)
சென்னையில் தனியார் சலூன் ஒன்றில் வழுக்கை தலையில் முடி நட்ட மருத்துவ மாணவர் உயிரிழந்தார்.


 

 
வழுக்கை தலை பிரச்சனையா? என்று நிறைய விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இளம் வயதில் வழுக்கை தலை பிரச்சனை ஏற்படும் இளைஞர்கள் தலையில் முடி வளர்க்க வேண்டும் என்ற ஆசையில் வேதி பொருட்களை தலையில் தேய்த்து வருகின்றனர். இதற்காக அழகு நிலையங்களில் தனி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. 

அதுபோல ஆரணியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு பயிற்சி மருத்துவராக இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள அழகு நிலையத்தில் முடி நடுவதற்கு சிகிச்சை பெற்று உயிரிழந்தார்.
 
சந்தோஷ்குமார் என்பவருக்கு தலையில் வழுக்கை இருந்துள்ளது. எல்லோரையும் போல் முடி நடும் ஆசையில் அழகு நிலையம் ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு டாக்டர் ஹரிபிரசாத் என்பவர் மயக்க ஊசி போட்டுள்ளார். காலையில் தொடங்கி மாலை வரை சிகிச்சை நடைப்பெற்றுள்ளது. அப்போது சந்தோஷ்குமாருக்கு தலை சுற்று ஏற்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் வீட்டுக்கு சென்றார்.
 
ஆரணியில் மீண்டும் உடல் நிலை பாதித்து அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
அவரது உடலும் பிரேத பரிசோதனை இன்றி அடக்கம் செய்யப்பட்டது. இந்த தகவல் அறிந்தவுடன் மருத்துவ துறை சார்பில் மருத்துவ கவுன்சிலுக்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரித்தபோது தவறான சிகிச்சையால் உயிரிழந்தது தெரியவந்தது. 
 
இதையடுத்து மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளித்த மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ கவுன்சில் விசாரணைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்