ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2016 (13:26 IST)
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, உறவினர் இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
 

 
நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹா ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளித்ததோடு, அவருக்கு 4 வருட சிறைதண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது.
 
அதேபோல், ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாரகன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபரதாமும் விதிக்கப்பட்டது.
 
பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தனர். இந்த வழக்கு விசாரணையை கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த வழக்கை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தனி நீதிமன்றம் தீர்ப்பை ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
 
சொத்து மதிப்பை தவறாக கணக்கிட்டு, இவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக கூறி கர்நாடக அரசு சார்பிலும், இதனை தொடர்ந்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இம்மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட, நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்து வருகிறது.
 
இதில், முதலாவதாக கர்நாடக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பி.வி.ஆச்சார்யா ஆகியோரும், மூல மனுதாரர் என்ற வகையில் சுப்பிரமணியசாமியும் தங்களது தரப்பு இறுதி வாதத்தை முன்வைத்தனர்.
 
மேலும், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பிலும் அவரது வழக்கறிஞர்கள் தங்களது இறுதி வாதங்களை முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
 
இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனைத்துத் தரப்பினருக்கும் அனுமதி அளித்ததுடன், வெள்ளிக்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்