அரசியல் வேறு, மனிதாபிமானம் வேறு: மு.க.ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2016 (15:26 IST)
திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின்  நேற்று (10-11-2016) அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியை ஆதரத்து தொகுதி முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.  அப்போது அவர் பேசியதாவது:-


 

இந்த தேர்தல் எந்த சூழ்நிலையில் வந்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு நான் இங்கு வந்து வாக்கு கேட்டவன்தான். ஆனால், ஆறுமாதம் கழித்து இப்போது பொதுத்தேர்தல் முடிந்தப்பின் மீண்டும் ஒரு தேர்தலில் அரவக்குறிச்சியில் உங்களை சந்திக்க கூடிய சூழல் வந்திருக்கிறது.  இங்கு மீண்டும் ஏன் தேர்தல் வந்தது என்பது நீங்கள் அறிந்ததுதான். இங்கு அண்ணா தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்க கூடியவர் எப்படிப்பட்டவர் என்பது ஊரறிந்த உண்மை, நாடறிந்த உண்மை. அவருடைய பினாமியாக, பல அதிமுக அமைச்சர்களுடைய பினாமியாக இருக்க கூடியவர் அன்புநாதன்.  அவரது வீட்டில் ரெய்டு நடத்தியதில் கோடி, கோடியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பணம் மட்டுமல்ல, பணத்தை எண்ணக்கூடிய மெஷின் மற்றும் பணத்த எடுத்து செல்ல இருந்த ஆம்புலன்ஸ் ஆகியவையும் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

ஆம்புலன்ஸ் என்பது உயிர் பாதுக்காக்க உதவுவது. அதனால்தான் தலைவர் கலைஞர்  உயிர் பாதுகாக்கும் திட்டமாக 108 திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆக, அப்படிப்பட்ட ஆம்புலன்சை பயன்படுத்தி பணத்தை எடுத்து செல்ல அவர்கள் செய்த கொடுமைகள், அவைகளெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டன. இன்றைக்கு தமிழகத்தில் ஒரு ஆட்சி நடக்கிறது. நடக்கிறது என்று சொல்ல மாட்டேன், உட்கார்ந்திருக்கிறது. உட்கார்ந்துக்கூட இல்லை, படுத்துக் கிடக்கிறது. கடந்த ஒரு மாத காலமாக முதலமைச்சராக இருக்க கூடிய அம்மையார் ஜெயலலிதா உடல்நலிவுற்று மருத்துவமனையில் இருக்கிறார். நான் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அது அரசியல் நாகரீகமாகாது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாளே, அவர் குணம் பெற வாழ்த்து சொன்னவர் தலைவர் கலைஞர். அரசியல் வேறு, மனிதாபிமானம் வேறு. அதனால்தான். நானும் அவர் உடநலம் பெற வாழ்த்து சொன்னேன்.


ஆனால் அதே நேரத்தில் இப்போது இருக்க்கூடிய ஆட்சி எந்த நிலையில் இருக்கின்றது என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். கடந்த 5 வருடமாக ஒரு ஆட்சி இருந்தது. இப்போது  5 மாதமாக நடக்கிறது. ஆனால் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. ஒன்றே ஒன்றை தவிர அது காணொலி காட்சி
அதனால் தான் தலைவர் கலைஞர் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி நடைபெறவில்லை காட்சிதான் நடைபெறுகிறது என அடிக்கடி சொல்வார். ஆனால் இப்பொழுது காணொலி காட்சியும் நடைபெறவில்லை. காணாத ஆட்சி தான் நடைபெறுகிறது இதுதான் நிலை. இன்றைக்கு தமிழகம் சின்னா பின்னாமாகி கொண்டிருக்கிறது. எங்காவது ஒரு தொழிற்சாலை உண்டா?

2.42 இலட்சம் கோடி முதலீட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி நாங்கள் முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வரப்போகிறோம் என சொன்னார்கள். அதற்காக 100 கோடி 200 கோடி செலவு செய்தார்கள். நான் கேட்கிறேன் கடந்த 5 ஆண்டுகளில் எதாவது ஒரு தொழிற்சாலையாவது தமிழகத்திற்கு வந்திருக்கிறதா?

இன்றைக்கு செயல்படாத இந்த அதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றது. முக்கியமாக தொழில்துறையில் 18 வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றது. இதையெல்லாம் நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். ஆக செயல்படாத இந்த ஆட்சிக்கு பாடம் புகட்ட இந்த தேர்தலில் தலைவர் கலைஞர் அவர்களின் ஆசிபெற்ற வேட்பாளரான கே.சி.பழனிச்சாமி அவர்களுக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்திலே வாக்களிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் பேசினார்.
அடுத்த கட்டுரையில்