திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகினால், தான் அரசியலை விட்டு விலகத் தயார் என்றும், இதை ராகுல் காந்திக்கு ஒரு சவாலாக விடுப்பதாகவும் பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு முன்னணி ஊடகத்திற்கு பேட்டி அளித்த குஷ்பு, "கொஞ்சமாவது சூடு, சொரணை இருந்தால், காமராஜரை பற்றி அவதூறாகப் பேசிய திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறி இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் தனித்து நிற்க காங்கிரஸ் கட்சிக்கும் சரி, ராகுல் காந்திக்கும் சரி தைரியம் இல்லை" என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்ததைசுட்டிக்காட்டிய குஷ்பு, "அப்போது 40 சீட்டுகளை வாங்கிய காங்கிரஸ் வெறும் எட்டு தொகுதிகளில்தான் வென்றது. காங்கிரஸ் கட்சியால்தான் தோல்வி என்று திமுகவே கூறியது" என்று தெரிவித்தார்.
அப்படி இருக்கும்போது, இந்தத் தேர்தலில் 65 தொகுதிகளை காங்கிரஸ் கேட்பதாக வைத்துக்கொண்டாலும், 65 தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேட வேண்டுமல்லவா?" என்றும் அவர் கிண்டலடித்தது அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.