ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என சொன்னது ஏன்? ஈபிஎஸ் விளக்கம்..!

Siva

செவ்வாய், 22 ஜூலை 2025 (08:08 IST)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல" என்று கூறியது தமிழக அரசியலில் பெரும் விவாத பொருளாக மாறியது. இது பாஜகவுக்கான மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தனது கருத்து குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
 
எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், "ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்பதை பாஜக தலைமைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் நான் கூறவில்லை. அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து கூறி வந்தன. அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாகத்தான் நான் அவ்வாறு பேசினேன்" என்று தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அது கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று பாஜக அமைச்சர்கள் சிலர் கூறி வருகின்றனர். இதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் வழிமொழிந்து பேசி வருகிறார். இந்த சூழ்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
 
தற்போது, தனது பேச்சு பாஜகவுக்கு எதிரானதல்ல என்றும், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அதிமுக குறித்து விமர்சித்ததற்கு பதில் அளித்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளக்கம், பாஜகவுடனான உறவில் எந்தவித விரிசலும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்