அதிமுகவை எதிர்க்காதது ஏன்? விஜய்யின் தவெக விளக்கம்..

Mahendran

செவ்வாய், 22 ஜூலை 2025 (10:18 IST)
திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் தமிழக வெற்றி கழகம், அதிமுகவை எதிர்க்காதது ஏன் என்பது குறித்து, தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சேலம் அருகே நடைபெற்ற கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
 
அவர் பேசுகையில், "அதிமுக ஆரம்பிக்கப்பட்டபோது இளைஞர்களைக் கொண்ட கட்சியாக இருந்தது. அதேபோல்தான் தற்போது தமிழக வெற்றிக் கழகமும் உள்ளது. நம்மை பார்த்து திமுக கேள்வி கேட்கிறது. பேசிப் பேசி வளர்ந்த திமுகவுக்கு இன்றைக்கு பேச ஆள் இல்லை. 70 வயதுக்கு மேற்பட்டவர்களை கொண்டவர்களாக திமுக இருக்கிறது. ஆனால், நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் முக்கிய புள்ளியாக இளைஞர்கள் இன்றைக்கு இருக்கிறார்கள். ஆட்சிக்கு வராத தமிழக வெற்றி கழகத்தைப் பார்த்து ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்படுகிறது. ஆனால், திமுகவை பார்த்து யாரும் கேள்வி கேட்பதில்லை.
 
நாங்கள் ஏன் அதிமுகவை எதிர்க்கவில்லை என்றால், அதிமுக தொண்டர்கள் அனைவரும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துவிட்டார்கள் என்பதால்தான். அதிமுகவில், 'மோடியா லேடியா? என்று ஜெயலலிதா எழுப்பிய குரல் போல் இன்று இல்லை. பாஜகவுடன் கூட்டணி அமைத்துவிட்டு, அந்த கூட்டணிக்கு யார் தலைவர் என்றே தெரியாமல் உள்ளனர். எவ்வளவு பெரிய கூட்டணியாக இருந்தாலும், மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டால் வெற்றி பெற முடியாது," என்று அர்ஜுனா பேசினார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்