"ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் வரலாம்" என்ற தனது கருத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கும் பொருந்தும் என்று எடப்பாடி பழனிச்சாமி சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், தமிழக வெற்றி கழகத்துடன் இதுவரை எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது, அதிமுக - பாஜக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி முதன்முறையாக விடுத்த நேரடியான அழைப்பாகும். திமுகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் தீவிர முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டுள்ள நிலையில், ஏற்கனவே அவர் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அவர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்த அழைப்பை விஜய் ஏற்று அதிமுக கூட்டணியில் இணைவாரா அல்லது பாஜகவை கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நிபந்தனையை விதிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.