தமிழகம் , கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக இருந்து வந்த காவிரி பிரச்சனைக்கான இறுதி தீர்ப்பை நேற்று சுப்ரீம் கோர்ட் வழங்கியது. இந்த தீர்ப்பு தமிழகத்திற்கு பாதகமாக அமைந்துள்ளதால் தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அந்த வகையில் விரைவில் அரசியல் கட்சியை தொடங்கவிருக்கும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்திருந்தனர். குறிப்பாக ரஜினிகாந்த் இதுகுறித்து கூறியபோது, '"உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளது. இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது" என்று தனது டுவிட்டரில் கூறியிருந்தார்.
ரஜினியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பல்வேறு தரப்பினர் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் உள்ள சன்னப்பட்னா என்ற பகுதியில் இன்று காலை ரஜினியின் உருவ பொம்மை மற்றும் படத்தை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.