நெல்லையில் நேற்று மாணவர் ஒருவர், சக மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்த நிலையில், மாணவர்களை ஒழுங்குபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.
இந்த நிலையில், இது குறித்து இன்று பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நெல்லையில், மாணவர் அரிவாளால் சக மாணவர் மற்றும் ஆசிரியரை வெட்டிய சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க பல்வேறு வகைகளில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், சில சம்பவங்கள் இவ்வாறு நடைபெறுவது வேதனையை அளிக்கிறது என்றும், இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க மாணவர்களை செம்மைப்படுத்த சில வகை பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.