ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? அரசு பேருந்தில் நடக்கும் அநீதிக்கு கமல் ஆதங்கம்!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (13:17 IST)
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அரசு போக்குவரத்தில் மக்களுக்கு நிகழும் அநீதிக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 

 
கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் மீனவ பெண் ஒருவர் வைத்திருந்த கூடையில் நாற்றம் வருவதாக கூறி நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பேருந்தில் ஏற அனுமதிக்கவில்லை. இந்த விவகாரம் முதலமைச்சர் முக ஸ்டாலின் வரை சென்றதை அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீனவப் பெண்ணை பேருந்தில் ஏற்றாத நடத்துனர் மற்றும் ஓட்டுனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனைத்தொடர்ந்து நாகர்கோவிலில் அரசு பேருந்தில் இருந்து நடுவழியில் நரிக்குறவர்கள் சிலர் இறக்கிவிடப்பட்டதாக செய்திகள் வெளியானது. பார்வை குறைபாடுடைய கணவர், மனைவி, குழந்தை ஆகிய குறவர் குடும்பத்தினரை அரசு பேருந்து நடத்துனர் கீழே இறக்கி விட்டதுடன், அவரது உடமையையும் தூக்கி எறிந்துள்ளார். ஆனால் அங்கு இருந்து ஆட்டோ டிரைவர் ஒருவர் அவர்களுக்கு உதவி இருக்கிறார்.  
 
இந்த செய்தி வெளியான சில மணி நேரத்தில் அந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தமிழக அரசு அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்து அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, 
 
அரசுப் பேருந்திலிருந்து மீன் விற்கும் மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட சம்பவத்தால் தமிழகமே கொதித்துக்கிடக்கிறது. நேற்று குறவர் இனத்தைச்சேர்ந்த ஒரு ஏழைக்குடும்பம் பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு, உடைமைகளும் சாலையில் வீசப்பட்டுள்ளன.
 
ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா? மக்களிடம் மரியாதை காட்டாத ஊழியர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற அவமதிப்புகள் இனியும் நிகழாமல் இருப்பதை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி செய்யவேண்டும் என கோரியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்