கபாலி வழக்கு ; ‘மகிழ்ச்சி’ என்று கூறிய நீதிபதி : நீதிமன்றத்தில் சிரிப்பலை

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (11:40 IST)
கபாலி படத்திற்கு தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றது.


 

 
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி திரைப்படம் வருகிற 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிக்கெட்கள் அரசு நிர்ணயித்ததைவிட பல மடங்கு அதிக விலையில் திரையரங்கு கவுண்டரிலேயே விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
 
எனவே கபாலி படத்தை தடை செய்யவேண்டும் என்று சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
அவர் தன் மனுவில், கபாலி படம் தொடர்பாக, அரசு தலைமைச் செயலாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு கடந்த 15ஆம் தேதி புகார் மனு அனுப்பினேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனது மனுவை முடித்து வைக்கும் வரை கபாலி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது “திருட்டு வீசிடி வந்தால் குதிக்கிறார்கள். ஆனால் இவர்கள் டிக்கெட்டின் விலை என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறார்கள். தங்களுக்கு வந்தால் ரத்தம். பொதுமக்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? என்று வாதிட்டார்.
 
இது தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருபாகரன் “ இதுபற்றி, மனுதாரர் ஏற்கனவே அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார். அந்த மனு அவர்களிடம் போய் சேர்ந்ததா என்று அவர் தெரிந்து கொள்ளவில்லை. நடவடிக்கை எடுக்க போதுமான அவகாசமும் கொடுக்கவில்லை. அதற்குள் நீதிமன்றத்தை நாடியுள்ளார். முதலில் அதை தெரிந்து கொண்டு, அதற்கு பின் நீதிமன்றத்திற்கு வாருங்கள்” என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
 
மேலும் “பெரிய நட்சத்திரங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் போது, இவ்வளவு செலவு செய்து வழக்கு தொடர்வது ஏன்?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். 
 
அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் “தாங்கள் எப்படி சமூக அக்கறையுடன், சில வழக்குகளில் தீர்ப்பு கூறுகிறீர்களோ, அதுபோல் இதுவும் ஒரு சமூக அக்கறைதான்” என்று கூறினார். இதைக் கேட்ட நீதிபதி ‘மகிழ்ச்சி’ என்று கூறினார். இதைக் கேட்டு நிதிமன்றத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.
 
கபாலி பட டீசரில் ரஜினி ‘மகிழ்ச்சி’ என்று வசனம் பேசியிருப்பார். அந்த வசனம் மிகம் பிரபலாமாகியுள்ளது. தற்போது அது நீதிபதியே கூறும் அளவுக்கு சென்று விட்டது.
அடுத்த கட்டுரையில்