தேர்தல் வாக்குறுதிகளை 97 சதவீதம் நிறைவேற்றியதாக திமுக பச்சை பொய் சொல்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார்.
சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத்தில் நான் பேசுவதை நேரலையில் ஒளிபரப்புவது இல்லை என்று புகார் தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியும், அதற்கு ஆளும் கட்சித் தரப்பில் முறையான பதில் அளிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பியும் முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்கவில்லை என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இரண்டு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளதாகவும், திமுக என்ன புதிய திட்டங்களை கொண்டு வந்ததாகவும் கேள்வி எழுப்பினார்.
அதிமுக ஆட்சியில் செய்த மக்கள் நல பணிகளை பட்டியலிட்ட எடப்பாடி, ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டி காட்டுவது எதிர்க்கட்சிகளின் கடமை என தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதிகளை 97 சதவீதம் நிறைவேற்றியதாக திமுக பச்சை பொய் சொல்கிறது என்றும் பத்து சதவீதம் கூட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.