தொகுதி மறுசீரமைப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் - சட்டசபையில் தனி தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!

Senthil Velan

புதன், 14 பிப்ரவரி 2024 (12:48 IST)
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் ஒரே நாடு-ஒரே தேர்தல் தொடர்பாக சட்டசபையில் முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டு வந்த இரண்டு தனி தீர்மானங்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
 
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தொகுதி மறுசீரமைப்பு மற்றும் ஒரே நாடு-ஒரே தேர்தல் தொடர்பாக கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானங்களை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். 
 
நாட்டையும் நாட்டு மக்களையும் அச்சத்திலும் பதற்றத்திலும் வைக்கும் இரண்டு மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து இந்த மாமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியாக வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
 
ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்கிற மிக மோசமான எதேச்சாதிகார எண்ணமாகும் என்றும் இதனை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும் என்றும் அவர் கூறினார். அதேபோல் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் சதி, இதனை முறியடித்தாக வேண்டும் என்று முதல்வர் தெரிவித்தார்.
 
இவை இரண்டுமே மக்களாட்சியைக் குலைக்கும் செயல்கள் என்பதால் இவை இரண்டுக்கும் எதிராக நாம் அனைவரும் ஒருசேரக் குரல் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். 
 
இதை அடுத்து முதல்வர் கொண்டு வந்த இரண்டு தனி தீர்மானங்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்