மல்லிகைப்பூ வாசம்.. சிசிடிவியில் தோன்றிய கருப்பு உருவம்..! – பேய் பீதியில் கிராம மக்கள்!

Webdunia
வியாழன், 2 மார்ச் 2023 (12:13 IST)
திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியில் சிசிடிவி கேமராவில் இறந்து போன பெண்ணின் ஆவி தோன்றியதாக வெளியாகியுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள பெரிய காலனி பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசித்து வந்த மல்லிகா என்ற பெண் சமீபத்தில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரயில் ஏற சென்றபோது தவறி விழுந்து மரணமடைந்தார். அதன் பின்னர் அவரது வீடு பூட்டப்பட்டே இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் மல்லிகாவின் வீட்டுக்கு எதிர்வீட்டில் வசிக்கும் ராபர்ட் என்பவர் அவரது வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளார். ஒருநாள் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது பூட்டியிருக்கும் மல்லிகாவின் வீட்டிலிருந்து கருப்பான அமானுஷ்ய உருவம் வெளியேறுவதும் சாலைகளில் நடப்பதும் கண்டு ராபர்ட் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். அந்த சிசிடிவி வீடியோவை அவர் மற்றவர்களுக்கும் பகிர அந்த பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் இரவில் அப்பகுதியில் மல்லிகை பூ வாசம் வீசுவதாகவும், கொலுசு சத்தமும், யாரோ சிரிப்பது போலவும், அழுவது போலவும் சத்தங்கள் கேட்பதாகவும் பலரும் கூற இரவில் மக்கள் வெளியே வரவே பயந்து வீடுகளில் பதுங்கியுள்ளனர். இதனால் தனியாக யாரும் வெளியே செல்லாமல் பீதியிலேயே இருந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் ராபர்ட்டின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் கேமரா முன்பு சிலந்தி வலை பின்னியிருந்ததும் அதனால்தான் அவ்வாறு கருப்பு உருவம் தோன்றியதுமாக தெரிய வந்துள்ளதாம். இதையடுத்து பீதியை ஏற்படுத்திய ராபர்ட்டை அப்பகுதி மக்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியே சில நாட்களாக பீதியில் ஆழ்ந்திருந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்