நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதாவின் தற்கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை அமைதியாக இருந்தவர்கள் கூட மாணவி அனிதாவின் மரணத்திற்கு பின்னர் வெகுண்டெழுந்துவிட்டனர்.
இதனால் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மாணவியின் மரணத்திற்கு காரணம் மத்திய மாநில அரசுகள் தான் என பலரும் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சியினர், அமைப்புகளை சார்ந்தவர்கள் என பலரும் மாணவின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போராட்டத்தில் எண்ணெயை ஊற்றும் விதமாக பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவீட்டில், சில நாட்களுக்கு முன்னர் வேலூரில் நீட் தேர்வு எழுதிய மாணவர் ஒருவரின் தாய் தற்கொலை செய்தபோது இப்போது வந்து போராடுபவர்கள் எல்லாம் எங்கு போனார்கள் என கூறியுள்ளார்.
இது நெட்டிசன்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. எச்.ராஜாவின் இந்த டுவிட்டுக்கு அவர்கள் கடுமையான பதிலடிகளை கொடுத்து அவரை திட்டி வருகின்றனர். தமிழகத்துக்கு நீட் தேர்வை கொண்டு வந்தே ஆக வேண்டும் என பிடிவாதமாக இருந்தவர் எச்.ராஜா. நீட் தேர்வுக்கு ஆதரவாக எச்.ராஜா பல கருத்துக்களை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.