அந்தம்மா இருந்திருந்தால் என் அனிதா மருத்துவராகியிருப்பார்: கண் கலங்கும் சகோதரன்!

சனி, 2 செப்டம்பர் 2017 (15:13 IST)
நீட் தேர்வுக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் அவருக்கு அனுதாப அலை வீசினாலும் அரசின் மீதான கோபம் மக்களுக்கு அதிகமாகியுள்ளது.


 
 
இதனால் வெகுண்டெழுந்து மக்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசும் மத்திய அரசும் தான் அனிதாவின் உயிரை பறித்தது என அனைத்து தரப்பு மக்களும் ஒரே குரலில் அரசுக்கு எதிராக கண்டனங்களை வைத்து வருகின்றனர்.
 
அதே நேரத்தில் நீட் தேர்வை தான் இருக்கும் வரை அனுமதிக்காமல் உறுதியாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் தற்போது நீட்டும் வந்துருக்காது, மாணவி அனிதாவின் தற்கொலையும் நடந்திருக்காது என பலரும் கூறி வருகின்றனர்.
 
இந்த கருத்தை ஏற்கனவே அனிதாவின் தந்தை கூறியிருந்த நிலையில் அனிதாவின் பெரியப்பாவின் மகன் அறிவுநீதியும் கண்கலங்கியவாறு கூறியுள்ளார். அவர் கூறும் போது, ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், நிச்சயம் அவர் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதில் வேகமாக செயல்பட்டு ஒரு முடிவெடுத்திருப்பார்.
 
தற்போது உள்ள அரசை போல டெல்லி சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு நீட் உரிமையை இழந்திருக்க மாட்டார். அந்தம்மா இருந்திருந்தால் என் அனிதா இறந்திருக்க மாட்டாள். மருத்துவர் ஆகியிருப்பார். யார் என்ன ஆறுதல் கூறினாலும், இனி என் தங்கை எங்களுக்குக் கிடைக்க மாட்டார் என கண்கள் கலங்க தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்