இது யாருக்கான அரசு? - இயக்குனர் பா.ரஞ்சித் விளாசல்

சனி, 2 செப்டம்பர் 2017 (14:10 IST)
மாநில அரசு தீர்க்கமான முடிவெடுத்திருந்தால் மாணவி அனிதாவின் தற்கொலையை தடுத்திருக்க முடியும் என இயக்குனர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வினால் மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது தமிழகத்தில் பூதாகாரமாய் வெடித்துள்ளது. அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று அரசியல் தலைவர் சிலரும், சினிமா துறை மற்றும் பொது மக்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது. 
 
இந்நிலையில் சினிமா இயக்குனர் பா.ரஞ்சித் அரியலூருக்கு நேரில் சென்று அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
 
சமவுடமை இல்லாத இந்த தேசத்தில் எளிய மக்களின் மரணங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. சமூகம், அரசியல், வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம் அனைத்திலும் அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது.
 
இந்த அரசு யாருக்காக இருக்கிறது எனத் தெரியவில்லை. இந்த சமூகத்தில் படிப்பதற்கு கூட வழியில்லாமல் அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்விற்கு எதிராக அனைவரும் போராட முன்வரவேண்டும். 
 
சுவாதி படுகொலை செய்யப்பட்ட போது எழுந்த எழுச்சி, அனிதா மரணத்திற்கு ஏற்படவில்லை. இதை விட என்ன மோசமான சம்பவம் தேவை?. நீட் விவகாரத்தில் மாநில அரசு ஒரு தீர்க்கமான முடிவை எடுக்காததே இதற்கு காரணம். சாதி, சேரி என்பதை மறந்து நாம் தமிழர்கள் என்று ஒன்றுபட்டு என்றைக்கு குரல் கொடுக்கிறோமோ அப்போதுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகள் கிடைக்கும்” என அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்