இளைஞர்களின் போர் நிகழ வேண்டும்: அனிதாவுக்காக அறைகூவல் விடுக்கும் நடிகர் பார்த்திபன்!

சனி, 2 செப்டம்பர் 2017 (15:48 IST)
தமிழகம் முழுவதும் மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான நீட் தேர்வு மற்றும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்கள் மேலும் வலுபெறும் விதமாக நடிகர் பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.


 
 
மாணவி அனிதா நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார். ஆனால் அனிதாவின் மருத்துவர் கனவை நனவாகவில்லை. இதனால் மனமுடைந்த மாணவி அனிதா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
இவரது தற்கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனிதாவின் மரணத்திற்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
 
இந்த போராட்டம் அதிகரித்தே வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தை போல இந்த போராட்டமும் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில் இந்த போராட்டம் மேலும் வலுபெறும் விதமாக நடிகர் பார்த்திபன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
அதில், நூறு உயிர்களையாவது காக்கவே ஒரு மருத்துவர். அம்மருத்துவரையே கொல்வது? பெருந்துயர்! இனி மறு துயர்- மறு தவற் நிகழுமுன் தடுக்க, இன்று கோர்க்கும் இளைஞர்களின் கரங்கள் விலகா போர் நிகழ வேண்டும் என உணர்ச்சி பொங்க தனது வேதனையை பதிவு செய்து, இளைஞர்களை போராட்டம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்