தமிழக அரசியலில் இன்று நிச்சயம் பல அதிரடி திருப்பங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து நீதிமன்றம் சொல்ல உள்ள தீர்ப்பு மற்றும் ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இதனால் தமிழக அரசியல் சூழல் இன்று பரபரப்பாகவே காணப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இன்று உற்சாகமாகவே காணப்படுகிறது. எல்லாம் தங்களுக்கு சாதகமாகவே நடக்க உள்ளது என டெல்லியில் இருந்து வந்த தகவலால்தான் இந்த உற்சாகம் என கூறப்படுகிறது.
தமிழகம் வந்துள்ள ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதல்வருக்கு எந்த நேரம் வேண்டுமானாலும் உத்தரவிடலாம். அதே நேரத்தில் தகுதி நீக்கம் குறித்து எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளதில் தகுதி நீக்கம் செஞ்சது செல்லாது என்றே தீர்ப்பு வரும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த தீர்ப்பு உடனடியாக வராது என்பது தான் முக்கியமானது.
இந்த காலகட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடித்துவிடும். தீர்ப்பு வந்த பின்னர் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கோருவார்கள். ஆனால் அந்த கால கட்டத்தில் குறைந்தது 11 எம்எல்ஏக்களை தினகரன் தரப்பில் இருந்து இழுக்க டெல்லி தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார்கள் என்பது கூடுதல் தகவல்.