"மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தின்போது ஒரத்தநாட்டில் பேசிய பழனிசாமி, தங்கள் ஆட்சி மீண்டும் அமைந்தால், கோவில் நிலங்களில் ஏழைகளுக்கு வீடு கட்டி, அந்த நிலத்தை அவர்களுக்கு பட்டா போட்டுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் இது போன்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் நீதிமன்றம் அதற்குத் தடை விதித்ததாகவும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அந்தத் தடையை சட்டப்பூர்வமாக அணுகி, ஏழை எளியவர்களுக்கு கோவில் நிலத்தில் வீடு கட்டி தருவோம் என்றும், அந்த நிலத்தை அவர்களுக்குச் சொந்தமாக்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வாக்குறுதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக, கோவில் நிலத்தில் கல்லூரி கட்டுவதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது கோவில் நிலத்தை மக்களுக்கே தருவதாக அவர் அறிவித்திருப்பது, மக்கள் மத்தியில் வெவ்வேறு விதமான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாக்குறுதி தேர்தல் களத்தில் ஒரு முக்கிய விவாத பொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.