2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது யார் என்பது குறித்து உளவுத்துறை அதிகாரிகள் ரகசிய சர்வே நடத்தி வருவதாக கூறப்படுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, கிராம பகுதிகளுக்குச் செல்லும் உளவுத்துறை அதிகாரிகள், முதல்வர் ஸ்டாலினின் பல்வேறு திட்டங்கள் மக்களை, குறிப்பாக கிராமப்புற மக்களை சென்றடைந்துள்ளனவா என்பது குறித்து தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. நலத்திட்டங்களின் பலன்கள், மக்களின் திருப்தி நிலை ஆகியவை குறித்து அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணங்களுக்கு மக்கள் மத்தியில் எப்படிப்பட்ட ஆதரவு இருக்கிறது, அவரது பேச்சுகள் மக்களை சென்றடைகிறதா, மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்களா என்பது குறித்தும் உளவுத்துறை அதிகாரிகள் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
மேலும், தற்போதைய தமிழக அரசின் சாதனைகள் மக்களிடம் முழுமையாக போய்ச் சேர்ந்ததா, மக்களின் அடிப்படை எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் உளவுத்துறை அதிகாரிகள் விரிவான சர்வே எடுப்பதாக கூறப்படுவது அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரகசிய அறிக்கை, ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் தேர்தல் வியூகங்களை வகுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.