பீகார் மாநிலம் கோபால்கஞ்சில், சைபர் கிரைமில் ஈடுபட்டதாக கூறப்படும் இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் வீட்டில் இருந்து ரூ.1.05 கோடிக்கும் அதிகமான ரொக்க பணமும், பெருமளவிலான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்களில் ஒருவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரகசியத் தகவலின் அடிப்படையில், அக்டோபர் 17 அன்று நடத்தப்பட்ட சோதனையில், ரூ.1,05,49,850 ரொக்கம், 344 கிராம் தங்கம், 1.75 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் சைபர் குற்றத்துடன் தொடர்புடைய 85 ஏ.டி.எம். அட்டைகள், 75 வங்கி கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
முக்கியக் குற்றவாளியான அபிஷேக் குமார் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இவர் துபாயில் இருந்து மோசடிகளை ஒருங்கிணைக்க, அவரது சகோதரர் ஆதித்யா குமார் இந்தியாவில் பணப் பரிமாற்றங்களைக் கையாண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மோசடி பணம் பல வங்கிக் கணக்குகள் மூலம் ரொக்கமாக மாற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகங்களில் பெரும்பாலானவை பெங்களூருவில் வழங்கப்பட்டிருப்பதால், விசாரணை மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வருமான வரித் துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படையும் விசாரணையில் இணைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.