எடப்படி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள தினகரன் சில எம்எல்ஏக்களை தனக்கு ஆதரவாக வைத்துக்கொண்டு ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். இதனால் தினகரனின் ஆட்டத்துக்கு நிரந்தரமாக முடிவுகட்ட அதிமுக பொதுக்குழுவை கூட்ட உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
கடந்த ஆகஸ்ட் மாதம் தினகரன் தனது செல்வாக்கை நிரூபிக்க மதுரை மாவட்டம் மேலூரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அதன் பின்னர் சசிகலாவின் பிறந்த நாள் அன்று அவரை சிறையில் சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய தினகரன், எடப்பாடி பழனிச்சாமி அணியில் எங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் ஸ்லீப்பர் செல்கள் மாதிரி பலர் இருக்கின்றனர். மேலூர் பொதுக்கூட்டத்துக்கு வராதவர்கள் தேனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு வருவார்கள் என்றார்.
அதன் பின்னர் சில தினங்களுக்கு முன்னர் சொகுசு விடுதியில் இருந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி தனியார் தமிழ் வார இதழின் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஓபிஎஸ், எடப்பாடி என இரு அணியிலும் இருப்பதாக கூறினார்.
இந்நிலையில் சசிகலாவை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்க வரும் 12-ஆம் தேதி பொதுக்குழுவை கூட்ட உள்ளனர். இந்த கூட்டம் எதிர்ப்பு இல்லாமல் நடப்பதற்கான முன்னோட்டமாக நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்தினார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தினகரன் அணியில் இருப்பவர்களில் 9 பேர் இங்கு வர ரெடியா இருக்காங்க. அவங்களுக்குத்தான் இங்கே ஸ்லீப்பர் செல்ஸ் இருப்பாங்களா, நமக்கு இருக்க மாட்டாங்களா? நம்ம ஸ்லீப்பர் செல்ஸ் உள்ளே இருக்காங்க. அவர்கள் தேவைப்படும் நேரத்தில் வருவார்கள் என பேசினார்.