நீட் தேர்வால் சமூக நீதி பாதுகாக்கப்பட்டுள்ளதாம்: தமிழிசை விளக்கம்!

புதன், 6 செப்டம்பர் 2017 (10:07 IST)
தமிழகம் முழுவதும் பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் என பலரும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் பாஜக உள்ளிட்ட சில கட்சியினர் நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.


 
 
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதாவின் தற்கொலை மரணத்திற்கு பின்னர் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. தினமும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வீதிக்கு வந்து போராடுகின்றனர்.
 
இந்த போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டம் போல இது உருவெடுத்துவிடுமோ என ஆட்சியாளர்கள் அஞ்சும் அளவுக்கு போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
 
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, நீட் தேர்வுக்குத் தமிழகம் எதிரானது அல்ல. அது வேண்டுமென்றே தமிழகத்துக்கு எதிரானது போல் முன்னிறுத்தப்படுகிறது. நீட் தேர்வால் பணக்கார பிள்ளைகளும், வடஇந்திய மாணவர்களும் பயன் அடைந்ததாகத் தவறான கருத்து முன்னிறுத்தப்படுகிறது. நீட் தேர்வால் சமூக நீதி பாதுகாக்கப்பட்டுள்ளது என்றார்.
 
மேலும் மாணவர்களை அரசியல் கட்சியினர் தவறாக வழி நடத்தி போராட வைக்கின்றனர். தமிழக அரசியல்வாதிகள் இந்தச் சூழ்நிலையை தங்கள் அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மாணவர்களை தெருவுக்கு வாருங்கள் என்று அரசியல்வாதிகள் அழைப்பது தவறு. எது நல்லது கெட்டது என்று மாணவர்களுக்கு தெரியும் என தமிழிசை கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்