குற்றச்சாட்டுகளை வாசித்த ED வழக்கறிஞர்.! மறுப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி..! நீதிமன்றத்தில் பரபரப்பு..!!

Senthil Velan
வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (17:37 IST)
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கறிஞர், குற்றச்சாட்டுகளை வாசித்த போது, அதற்கு மறுப்பு தெரிவித்த செந்தில்பாலாஜி தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
 
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 
 
இந்த மனு முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில்பாலாஜியை சிறைத் துறை அதிகாரிகள் இன்று (ஆக.8) நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
 
அதன்படி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவுக்காக ஆஜர்படுத்தப்பட்டார். புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜி, பலத்த பாதுகாப்புடன் நீதிபதி அல்லி முன்பாக ஆஜர் படுத்தப்பட்டார். 
 
செந்தில் பாலாஜி நீதிமன்றத்திற்கு வந்தபோது, கையில் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக பொருத்தப்படும் ஊசியுடன் இருந்தார். செந்தில் பாலாஜியை நாற்காலியில் அமர வைத்து, அவரிடம் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை வாசித்துக் காட்டி, குற்றச்சாட்டு பதிவை  நீதிபதி அல்லி மேற்கொண்டார்.
 
தன் மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறேன் என்று செந்தில் பாலாஜி தெரிவித்தார். தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அமலாக்கத்துறை வழக்கறிஞரிடம், செந்தில் பாலாஜி வாக்குவாதம் செய்ததால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ: ஒலிம்பிக் மல்யுத்த போட்டி.! அமன் ஷெராவத் அரை இறுதிக்கு தகுதி..!
 
தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவு நிறைவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்