காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை : திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2018 (18:50 IST)
கருணாநிதியின் உடல் நிலை குறித்து புதிய அறிக்கையை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

 
உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை, காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை சந்தித்த புகைப்படம் வெளியாகி ஏற்கனவே திமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏனெனில், அந்த புகைப்படத்தில் சிகிச்சை பெறும் கருணாநிதியின் முகம் தெளிவாக தெரிகிறது. ராகுல் வந்துள்ளார் என கருணாநிதியின் காதில் ஸ்டாலின் கூறும் புகைப்படமாகவும், அதை கருணாநிதி உணரமுடிகிற நிலையில் கருணாநிதி இருக்கிறார் என உறுதியாகும் விதமாக இப்படம் அமைந்துள்ளது. மேலும், செயற்கை சுவாசம் பொருத்தப்படாமல் கருணாநிதி இயற்கையாகவே சுவாசிப்பது தெரிகிறது. 
 
தங்களின் தலைவர் கருணாநிதி நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்கிற நம்பிக்கையை திமுக தொண்டர்களுக்கு இந்த புகைப்படம் கொடுத்துள்ளது. எனவே, சமூக வலைத்தளங்களில் திமுகவினர் இந்த புகைப்படத்தை மகிழ்ச்சியாக  பரப்பி வருகின்றனர்.
 
 
இந்நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்து வரும் காவேரி மருத்துவமனை தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் “கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது. அவரின் நாடித்துடிப்பு நன்றாக இருக்கிறது. கடந்த 29ம் தேதி அவரது உடலில் ஏற்பட்ட பின்னடைவிற்கு பின் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை காரணமாக அவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டம் ஆகியவை சரி செய்யப்பட்டுள்ளது. வயது முதிர்வு காரணமாக இன்னும் சில நாட்களுக்கு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. அவர் நன்றாக இருக்கிறார்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 
இதனையடுத்து, புகைப்படம் வெளியான நிலையில், நேர்மறையான மருத்துவ அறிக்கையும் வெளியானதால், மருத்துவமனை வாசலில் திமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்